விக்கி
2. விக்கி
விக்கி சதுரங்க போட்டியில் கலந்து கொண்டுவிட்டு பெங்களூரிலிருந்து ரயிலில் சென்னை திரும்பி கொண்டிருந்தான். ரயிலில் அவன் பெட்டியில் அமர்ந்திருக்கும் பெண் அவன் கவனத்தை கவர்ந்தாள். சிறிது நேரம் கவனிக்காத மாதிரி நடித்தாலும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.
அவன் பேச ஆரம்பித்தான். நீங்க சென்னையா………….ரயில் சென்னையை அடையும்போது அவர்கள் நண்பர்களாக மாறியிருந்தார்கள். நட்பு தொடர்ந்தது. பிறகு அது காதலாக மாறியது. உயிருக்கு உயிரான காதலர்களாக மாறியிருந்தார்கள். அவர்கள் காதல் ஒரு வருடத்தை நிறைவு செய்திருந்த போது, விக்கி சதுரங்க போட்டியில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் கிளம்பினான். விமானம் கிளம்பிய ஒரு மணி நேரத்திலே என்ஜின் கோளாறு காரணமாக வெடித்து சிதறி கடலில் விழுந்தது.
எல்லோரும் உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டார்கள். பல உடல்களை மீட்கவே முடியவில்லை. பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போய்விட்டது. நான்கு வருடங்கள் கடந்து போய் விட்டது. தன்னுடைய உயிர்காதலனின் மரணத்திலிருந்து மீண்டு வந்திருந்தாள் ஜோ. காலம்தான் எல்லாவற்றையும் மறக்க செய்துவிடுமே, ஜோ புதிய காதலில் விழுந்தாள்.
விக்கி இறந்து ஐந்து வருடங்கள் நிறைவு ஆன போது அவன் உயிரோடு இருப்பதாக அரசு அறிவித்தது. ஏதோ ஒரு பகுதியில் உயிரோடு கரை ஒதுங்கிய விக்கி, ஒரு தீவிரவாத குழுவிடம் சிக்கி கொண்டதாகவும் அவர்கள் அவனை உளவாளி என்று கருதி சிறை வைத்ததாகவும் கூறினார்கள்.
ஐந்து வருடங்களாக சிறையில் இருந்த விக்கிக்கு ஒரே ஆறுதல் அவனுடைய காதல்தான். காதல் நினைவுகளிலும் கற்பனைகளிலும் அவன் முழ்கியிருந்தான். அவனுடைய கற்பனைகள் அவன் காதலை வலுவடைய செய்திருந்தது.
விக்கி ஊர் திரும்பினான். அவள் தனக்காக தன் நினைவுகளுடனும்,காதலுடனும் காத்துகொண்டிருப்பாள் என்று நம்பினான்.
ஜோ வை சந்தித்தான் அவனுடைய கற்பனைகள் உடைய ஆரம்பித்தது. அவனால் உண்மையை ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை. ஜோ வால் அவனுக்கு ஆறுதல் மட்டும்தான் சொல்ல முடிந்தது. அவளை பொறுத்த வரைக்கும் அந்த காதல் பூத்து உதிர்ந்து போன மலர், புதிதாக பூத்து குலுங்கி கொண்டிருக்கும் மலரை தூக்கியெறிய அவள் தயாராக இல்லை.
இருந்தாலும் அவளுக்கும் சங்கடமாகதான் இருந்தது. ஒரு இடைவெளி உருவாகிவிட்டாலே மீண்டும் பழைய நெருக்கம் வர நாள்கள் ஆகும். ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் இறந்துவிட்டதாக நினைத்து, உயிருடன் வந்து நிற்கும் காதலனுக்கு அவள் கை விரித்து விட்டாள்.
விக்கி யை பொறுத்தவரை அவனுடைய காதலில் இடைவெளியே இல்லை. அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. அழுதான், அழுதுகொண்டே இருந்தான் வாழ்வின் விசித்திரங்களை நினைத்து அவன் குழம்பினான்.
சதிஷ்
26-5-2011
Comments
Post a Comment